திருவாரூர் மாவட்டம் களப்பால் கிராமத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் மாரிமுத்து என்பவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்து போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், மறைந்த ரவுடி ராஜ்குமார் சமாதி அருகே 6 பேர் கொண்ட கும்பல், மக்களுக்கு இடையூறு செய்வதாக நீடாமங்கலம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், ஷியாம் உட்பட 5 பேரை பிடித்தனர். அப்போது மனோ நிர்மல்ராஜ் என்ற ரவுடி மட்டும் தப்பிச் சென்று, ஆதனூரில் பகுதியில் பதுங்கி தப்ப முயன்றுள்ளார். இதனையறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவர், காவலர் விக்னேஷின் வலது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக போலீசார் கூறுகின்றனர்.
இதனால், வேறுவழியின்றி உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், மனோ நிர்மல்ராஜை காலில் சுட்டுப் பிடித்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவதில் காயமடைந்த காவலர் விக்னேஷூம், ரவுடி மனோ நிர்மல்ராஜூம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே திருவாரூர் மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "ரௌடி நகர் தெருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார், காவலர்களுடன் சென்று கைது செய்ய முற்பட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர்-747 விக்னேஷ் என்பவரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயற்சித்தார். உதவிஆய்வாளர் எதிரியை எச்சரிக்கும் விதமாக கைத்துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டுள்ளார், தொடர்ந்து எதிரி தப்பிக்க முற்படவே வேறுவழியின்றி காலில் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு குண்டுகாயம் ஏற்பட்டு தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த காவலர் விக்னேஷ் என்பவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, அசாதாரண சூழ்நிலையில் சிறப்பாக செயல்பட்டு கொலை வழக்கின் எதிரியை கைது செய்த உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடித்தடி, பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயல்படும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்..." என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
Tags
Crime