POCSO வழக்கில் திருவாரூர் நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!


கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாயுடன் பொங்கலுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு சென்றார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, மாணவியை வழிமறித்த ராஜ்குமார் என்பவர்  அவரை கடத்திச் சென்றுள்ளார். பின்னர், பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மகளுக்கு நடந்த கொடுமை குறித்து அவரின் தந்தை  திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயது நிரம்பாத சிறார் என்பதால் போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விரைந்து கொரடாச்சேரி பெருமாளகரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியிடம் அத்துமீறியது தெரியவர, போக்சோ சட்டத்தின் கீழ் நீதி மன்றத்தில் ராஜ்குமாரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணை 2 வருடங்களுக்கு மேலாக  திருவாரூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 29 ஆம் தேதி போக்சோ வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி சரத்ராஜ் வாசித்தார். 

அதில், பள்ளி மாணவியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி ராஜ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீடு தொகையை தீர்ப்பு வழங்கிய 30 நாட்களுக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி சரத்ராஜ் தனது தீர்ப்பில் கூறியிருந்தார். முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி விட்ட காரணத்தினால், மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் விலக்கியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மீண்டும் சிறைக்கு ராஜ்குமார் வழிக்காவல் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவரை செய்தியாளர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய முயன்றார். உடனே, போலீசார் அவரை காவல் வாகனத்தில் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். 


இதனிடையே,  கடந்த 2021 ஆம் ஆண்டு பதியப்பட்ட போக்சோ வழக்கிற்கு, உடனடியாக மேற்கொண்ட விசராணையின் விளைவால், தற்போது குற்றாவாளிக்கு தண்டனை பெற்று தந்த இவ்வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்ற தலைமை காவலரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form